பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை
- வருவாய் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.3 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
- ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இட பற்றாக்குறை உள்ளதால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.3 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ள ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் புதிய கட்டட பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தலைமை வகித்து புதிய அலுவலகம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இணை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் லட்சுமணன், ஒன்றிய குழு துணை தலைவர் அபிராமி அசோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார்.இந்த விழாவில்,ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.