உள்ளூர் செய்திகள்

பொதுக்கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசிய போது எடுத்த படம்.

காங்கயம் - தாராபுரம் சாலையில் விரைவில் மாட்டு சந்தை தொடங்கும் - அமைச்சர் தகவல்

Published On 2023-05-11 11:11 GMT   |   Update On 2023-05-11 11:11 GMT
  • தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் களிமேடு பகுதியில் நடைபெற்றது.
  • மாவட்ட தலைமை மருத்துவமனையாக காங்கயம் அரசு மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காங்கயம் :

காங்கயம் நகர தி.மு.க. சார்பாக தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் களிமேடு பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் வசந்தம் ந.சேமலையப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. வருமுன் காப்போம் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மக்களை தேடி மருத்துவத் திட்டம் பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இதுவரையில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு கட்டணம் இல்லா பஸ், நான் முதல்வன் திட்டம், புதுமை பெண் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி உட்பட பல்வேறு சிறப்பான திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

மேலும் மாவட்ட தலைமை மருத்துவமனையாக காங்கயம் அரசு மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. காங்கயம் ஊராட்சி ஒன்றியம், படியூர் ஊராட்சியில் மக்கள் கோரிக்கையை தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு, அதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் கட்டப்படும். காங்கயத்தில் திங்கட்கிழமை தோறும் மாட்டு சந்தை நடைபெறுவதற்கு முதல்-அமைச்சர் அனுமதி வழங்க உள்ளார். விரைவில் காங்கயம் - தாராபுரம் சாலையில் மாட்டு சந்தை தொடங்கும். ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் , சிவன்மலை அடிவாரப்பகுதியில் விளையாட்டு அரங்–கம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

காங்கயம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக பொதுக்கூட்டம் பரஞ்சேர்வழியில் நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் சி.கருணைபிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் திருப்பூர் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் கலந்து கொண்டு தி.மு.க. அரசு 2 ஆண்டு காலத்தில் பொதுமக்களுக்காக செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சாதனைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி வரதராஜ், ஒன்றிய அவைத்தலைவர் எம்.ரவி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.கே.ரவிச்சந்திரன், காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவாநந்தன் உள்பட கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News