மாணவர்களிடையே நிகழும் மாற்றங்கள் - ஆசிரியர்கள் கண்காணிக்க நீதிபதி வேண்டுகோள்
- பள்ளிகளில் போக்சோ குழு அமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் மாணவர்களுக்கு எளிதாக கிடைக்கிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பள்ளிக்கல்வித் துறை, பெண்கள்நலக் கல்வி அறக்கட்டளை ஆகியன இணைந்து, புகையிலை ஒழிப்பு மற்றும் பள்ளிகளில் போக்சோ குழு அமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச் செல்வி வரவேற்றார்.
ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் பேசியதாவது:-
புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் மாணவர்களுக்கு எளிதாக கிடைக்கிறது. மேலும், பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் மோசமான சூழலும் உள்ளது. சமீப காலமாக போதையில் வாகனம் ஓட்டுதல்,போக்சோ வழக்குகள் அதிகளவில் பதிவாகிறது.
பள்ளிக் கல்வித்துறை, தன்னார்வ அமைப்புகள் இணைந்து இதற்கு தீர்வு காணும் விதமாக குழுக்கள் அமைத்து இயங்க வேண்டும். தொடர்ந்து கண்காணித்தல், சட்ட விழிப்புணர்வு, மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மகிளா கோர்ட்டு நீதிபதி பாலு பேசுகையில், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் நிகழும் மாற்றங்கள் குறித்து கண்காணிக்க வேண்டும். அனைத்து மாணவர்களையும் தங்கள் சொந்த குழந்தைகள் போன்று, பாதுகாப்பான முறையில் வளரும் விதமாக செயலாற்ற வேண்டும் என்றார்.