முதல்-அமைச்சர் கோப்பை போட்டி திருப்பூர் மாவட்டம் 20-வது இடம்
- பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் உட்பட 608 பேர் பங்கேற்றனர்.
- மொத்தம் 9 பதக்கங்களை கைப்பற்றிய திருப்பூர் மாவட்டம் 20வது இடம் பெற்றது.
திருப்பூர்:
மாநில முதல்வர் கோப்பைக்கான போட்டி சென்னையில் ஜூன் 30-ந்தேதி துவங்கியது. ஜூலை, 25 வரை ஒரு மாதம் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் உட்பட 608 பேர் பங்கேற்றனர்.
துவக்கத்தில் வெற்றி புள்ளிகளை பெற்று முதல் 10 மாவட்டங்களுக்குள் இருந்த திருப்பூர் பின்னர் பின்தங்கியது. இருப்பினும் போட்டி நிறைவில் 38 மாவட்டங்கள் பட்டியலில் 20வது இடத்தை தக்க வைத்துள்ளது.
டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் ஸ்ரீ சைலேஸ்வரி, ஸ்ரீ சாஸ்தாயினி ஜோடி தங்கம், தனிநபர் பிரிவில் ஸ்ரீ சைலீஸ்வரி வெள்ளி வென்றார். பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் பிரவந்திகா தங்கம், இரட்டை பிரிவில் பிரவந்திகா - பிரசித்தா ஜோடி தங்கம் வென்றனர். தனிநபர் பிரிவில் சுதன் வெள்ளி வென்றார்.
ஒற்றை சுருள்வாள் சிலம்பம் போட்டியில் சபரிநாதன் வெண்கலம், 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் வைஷாலி வெண்கலம், அரசு ஊழியர் பிரிவில் சதுரங்க போட்டியில் நித்யா, பாஸ்கர் இருவரும் வெண்கலம் வென்றனர். மாநில போட்டியில் 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட மொத்தம் 9 பதக்கங்களை கைப்பற்றிய திருப்பூர் மாவட்டம் 20வது இடம் பெற்றது.