உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தென்னை வளர்ச்சி வாரியம் சீரமைப்பு நிதி ஒதுக்கீடு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2022-08-09 04:33 GMT   |   Update On 2022-08-09 04:33 GMT
  • திருப்பூர் மாவட்டத்தில் 60 லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
  • நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்து தென்னை சாகுபடியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

குடிமங்கலம் :

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரம் உட்பட திருப்பூர் மாவட்டத்தில் 60 லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள், நீண்ட கால பயிராக பராமரிக்கப்பட்டு வருகின்றன.தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை, 2011, 2012 ல், இருந்து போதிய அளவு பெய்யவில்லை. அதிகரித்த வறட்சி காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்து தென்னை சாகுபடியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.போதிய தண்ணீர் இல்லாமல் உடுமலை சுற்றுப்பகுதியில், மட்டும் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கருகின. கடந்த சில ஆண்டுகளாக வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய் உள்ளிட்ட நோய்த்தாக்குதலால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கருகியுள்ளன.

மேலும் பருவமழை காலத்திலும் பலத்த காற்றுக்கு நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்வது தொடர்கதையாகியுள்ளது. கருகிய மரங்கள் தவிர்த்து, பல்வேறு நோய்த்தாக்குதலால் காய்ப்புத்திறன் இல்லாமல் பல மரங்கள் வெறுமையாக காட்சியளிக்கின்றன. இத்தகைய தென்னை மரங்களை அப்புறப்படுத்த கூட வழியில்லாமல் விவசாயிகள் திகைத்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் முன்பு தென்னந்தோப்பு சீரமைப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. மரத்துக்கு 1,700 ரூபாய் வரை விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு மாற்றாக புதிதாக தென்னங்கன்றுகளை நடவு செய்தல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், பராமரிப்பு ஆகியவற்றுக்கும் தென்னை வளர்ச்சி வாரியம், சீரமைப்பு நிதி ஒதுக்கப்பட்டது.தென்னை விவசாயிகள் பாதிப்பு குறித்து மாநில அரசு மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று சீரமைப்பு நிதியை தென்னை வளர்ச்சி வாரியம் வாயிலாக பெற்றுத்தர வேண்டும் என உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News