தேசிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த மேயர் தலைமையில் குழு
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தேசிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த மேயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்தது முதல், 2 வயது வரை, 13 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது. தேசிய அளவில் இந்த திட்டம் அடுத்த மாதம் 7ந் தேதி முதல் சிறப்பு முகாம்கள் மூலம் செயல்படுத்தப் படவுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பிற மாநில, பிற மாவட்ட தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். இதனால், அவர்கள் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகள் முழுமையாகச் செலுத்துவதை உறுதிப்படுத்தும் விதமாக இதற்கென சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதியில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநகர நல அலுவலர் கவுரி சரவணன் உறுப்பினர் செயலர், தடுப்பூசி திட்ட கண்காணிப்பு நல அலுவலர் வேலன், இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கம், இந்திய மருத்துவர் சங்கம், ஊட்டச்சத்து துறை, தொழிற்சாலை துறை, தொழிலாளர் நல துறை, குடிசை மாற்று வாரியம், போலீஸ் துறை உள்ளிட்ட துறையினர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.
வெளி மாவட்ட, வெளி மாநில தொழிலாளர் குழந்தைகளைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, இதற்காக துறை வாரியாக வழங்க வேண்டிய ஒத்துழைப்பு, பதிவுகள் மேற்கொள்ளும் நடவடிக்கை, அவற்றை முற்றிலும் சாப்ட்வேர் மூலம் முழுமையாக பதிவேற்றம் செய்து, தினமும் இதன் விவரங்களை குழுவுக்கு சமர்ப்பித்தல் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.