இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
- 3 அடி முதல் அதிகபட்சமாக 11 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
- இன்று நகர பகுதியில் இருந்து இடம் வாரியாக விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பூர்:
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். இந்து முன்னணி அமைப்பு சார்பில் விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது. மயில்வாகன விநாயகர், சிவசக்தி விநாயகர், சிம்ம வாகன விநாயகர், குபேர விநாயகர் உள்பட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
3 அடி முதல் அதிகபட்சமாக 11 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். திருப்பூர் மாநகர பகுதியில் 1,000 விநாயகர் சிலைகளும், மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் விநாயகர் சிலைகளும் வருகிற 18-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது என்று இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் தெரிவித்தார்.
இதற்காக ஒவ்வொரு பகுதியாக விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இன்று நகர பகுதியில் இருந்து இடம் வாரியாக விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டது. நாளை 18-ந் தேதி காலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
19-ந் தேதி பொங்கலூர், குண்டடம், காங்கயம், ஊத்துக்குளி, குன்னத்தூர் பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது. வருகிற 20-ந் தேதி அவினாசி, உடுமலை, பல்லடம், செஞ்சேரிமலை பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகிறது. 21-ந் தேதி திருப்பூரில் புதிய பஸ் நிலையம், செல்லம் நகர் பிரிவு, தாராபுரம் ரோடு ஆகிய 3 இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் தொடங்கி ஆலாங்காட்டில் இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது. பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், சிவலிங்கேஸ்வர சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்கள்.
அதன்பிறகு விசர்ஜனம் செய்ய சிலைகள் சாமளாபுரம் குளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.