தாராபுரம் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ.12½ கோடியில் கட்டிடப்பணி - அமைச்சர் ஆய்வு
- கல்லூரி கட்டிட கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர் கயல்விழி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
- கட்டுமான பணிகளுக்கு தரமான சிமெண்டு மற்றும் கட்டுமான பொருட்களை கொண்டு கட்ட வேண்டும்.
தாராபுரம்
தாராபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமான பணிக்கு அரசு ரூ.12½ கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதற்கான கட்டுமான பணிகளை தாராபுரம் ஐ.டி.ஐ. வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனர். அதன் முதற்கட்ட பணி தொடங்கி நடந்து வருகிறது. கல்லூரி கட்டிட கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர் கயல்விழி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தாராபுரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு கலைக்கல்லூரி கட்டிடம் நிர்ணயிக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். மேலும் கட்டுமான பணிகளுக்கு தரமான சிமெண்டு மற்றும் கட்டுமான பொருட்களை கொண்டு கட்ட வேண்டும். நீங்கள் கட்டும் கல்லூரி கட்டிடம் 100 ஆண்டுகளை கடந்தாலும் உறுதி தன்மையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது ஆர்.டி.ஓ.செந்தில் அரசன், தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி, தாராபுரம் தி.மு.க ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவருமான எஸ்.வி.செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் வக்கீல் கே.செல்வராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.