உள்ளூர் செய்திகள்

ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

அவினாசி கோவில் தேரோட்டம் குறித்து ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

Published On 2023-04-22 09:48 GMT   |   Update On 2023-04-22 09:48 GMT
  • அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற 25ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்குகிறது.
  • மே 2, 3, 4 ஆகிய மூன்று நாட்கள் தேரோட்டம் நடக்கிறது.

அவினாசி :

அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு தேரோட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று தாலுகா அலுவலகத்தில நடந்தது.திருப்பூர் மாவட்டம் அவினாசியில் ஏழு கொங்கு சிவாலயங்களில் முதன்மை பெற்ற கோவில், காசிக்கு நிகரான கோவில் என்ற பெருமை பெற்றதும், தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் உடையது என பல்வேறு சிறப்புகள் பெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற 25ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன்தேர் திருவிழா தொடங்குகிறது. மே 2, 3, 4 ஆகிய மூன்று நாட்கள் தேரோட்டம் நடக்கிறது.விழாவை முன்னிட்டு தேரோட்டம் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அவினாசி தாலுக்கா அலுவலகத்தில் சப் கலெக்டர்.ஸ்ருதன் ஜெயநாராயணன் தலைமையில் நடந்தது. இதில்பொதுப்பணித்துறை, மின்வாரியம் , காவல்துறை, நெடுஞ்சாலை துறை, ஊரக வளர்ச்சி துறை ,உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தேரோட்டத்தின் போது தேரோடும் பாதையில் மின் வினியோகத்தை துண்டிப்பு செய்ய வேண்டும்,தேரோட்டம் முடியும் வரை பாதுகாப்புக்கு பணியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும், தேரோடும் பாதையில் வருவாய் துறையின்மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் பொழுதுஉடனிருந்து தக்க உதவிகளை செய்ய வேண்டும், தேரோடும் போது தேரின் சக்கரத்திற்கு அருகில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் வராமல் இருப்பதற்கு தகுந்த அறிவிப்பினை அவ்வப்போது ஒலி பெருக்கி மூலம் தெரிவிக்க வேண்டும்.

பக்தர்கள் எவரும் தேருக்கு அருகில் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேரோட்டத்தின் போது தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு ஒலி எழுப்புதல், தேரோடும் சாலையில் வண்டிகளில் உணவு வைத்து விநியோகம் செய்வது தடுக்கப்பட வேண்டும்,மீட்பு பணிகள் துறை தீயணைப்பு ஊர்தியுடன் வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

தேரோட்டத்தின் போது சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் .அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்கிட ஏதுவாக மூன்று அவசர ஊர்திகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேரோட்ட சாலைகளில் வேகத்தடைகள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தேரோடும் சாலைகளின் குறுக்கே செல்லும் கேபிள் வயர்கள் போன்ற அனைத்து கம்பிகளையும் அப்புறப்படுத்த வேண்டும், குடிநீர் வசதி மற்றும் தற்காலிக கழிவறைகள் அமைக்க வேண்டும்,தனி நபர்களால் வழங்கப்படும் அன்னதானம் தரமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

Tags:    

Similar News