கொத்தமல்லி விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி
- பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில், 200க்கும் அதிகமான ஏக்கர்களில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது.
- விவசாயிகள் கிணற்றுப்பாசனத்தில் சுழற்சி முறையில் பாத்தி அமைத்து கொத்தமல்லி சாகுபடி செய்கின்றனர்.
பல்லடம் :
பல்லடம் மற்றும் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில்,சுமார் 200க்கும் அதிகமான ஏக்கர்களில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது. முன்பு மானாவாரி சாகுபடியாக மட்டும் கொத்தமல்லி வடகிழக்கு பருவமழையின் போது சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது கொத்தமல்லி தேவை அதிகரிப்பால் கொத்தமல்லி சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது.
விவசாயிகள் கிணற்றுப்பாசனத்தில் சுழற்சி முறையில் பாத்தி அமைத்து கொத்தமல்லி சாகுபடி செய்கின்றனர்.கொத்தமல்லி சாகுபடிக்கு அதிக செலவு பிடிப்பதில்லை.மேலும் திருமண முகூர்த்த காலங்களில் நல்ல விலையும் கிடைக்கிறது. இதனால் கொத்தமல்லி சாகுபடி பரப்பு பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்துள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன் விலை உயர்வால், ஒரு கட்டு கொத்தமல்லி விலை 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.இந்த நிலையில்,கடந்த ஆவணி மாதத்தில் சாகுபடி செய்த கொத்த மல்லி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆவணி, புரட்டாசி மாதங்களில் தொடர் மழை இல்லாததால் விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கட்டு ரூ.5க்கு விலைக்கு விற்பனையாகிறது. சில நேரங்களில் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து வருகிறது. இது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.