சேவூரில் சூறாவளி காற்றுடன் மழை - 5 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்
- பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன.
- அரசு தொடக்கப்பள்ளியில் கட்டிடத்தின் மேற்கூரையில் 200-க்கும் மேற்பட்ட ஓடுகள் தூக்கி வீசப்பட்டன.
திருப்பூர் :
திருப்பூரை அடுத்த பட்டம்பாளையம், காட்டுப்பாளையம், பருத்திக்காட்டுப்பாளையம் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் பட்டம்பாளையத்தில் ஒரு தென்னை மரம் முறிந்து விழுந்தது. ஒரு பனை மரம் வேரோடு சாய்ந்தது. இதுபோல் பருத்திக்காட்டுப்பாளையம் பகுதியில் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதுபோல் சுற்றுப்புற பகுதிகளில் வாழை மரங்களும் சேதமானதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
சேவூர் அருகே பொங்கலூர் ஊராட்சியில் பகுதியில் சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்கள் மழை அவ்வப்போது பெய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் பொங்கலூர் ஊராட்சி பகுதியில் உள்ள கிராமங்களில் தோட்டங்களில் வாழை மரங்கள் குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் 5000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தது.
மேலும் பொங்கலூர் புது காலனியில் மின்கம்பம் ஒன்று சாய்ந்தது. மேலும் அரசு தொடக்கப்பள்ளியில் கட்டிடத்தின் மேற்கூரையில் 200 -க்கும் மேற்பட்ட ஓடுகள் தூக்கி வீசப்பட்டன. இதை தொடர்ந்து வருவாய்த்துறையினர் வாழை மரங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது சேதமடைந்துள்ள வாழை மரங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனவிவசாயிகள் தெரிவித்தனர்.