மின்சாரத்துக்கான டிமாண்ட் கட்டணத்தை குறைக்க வேண்டும் -விசைத்தறி தொழில் துறையினா் வலியுறுத்தல்
- தமிழகத்தில் மின் கட்டண உயா்வால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- இக்கட்டான நிலையில் தொழில் நடத்த முடியாமலும், அண்டை மாநிலங்களுடன் தொழிலில் போட்டி போட முடியாத சூழலும் உருவாகி உள்ளது.
மங்கலம்:
மின்சாரத்துக்கான டிமாண்ட் கட்டணம் 3 மடங்கு உயா்த்தப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும் என்று விசைத்தறி தொழில் துறையினா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து விசைத்தறிகள் மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் துணைத்தலைவா் கரைப்புதூா் சக்திவேல் கூறியதாவது:-
தமிழகத்தில் மின் கட்டண உயா்வால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பஞ்சு விலை கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் அதிகரித்து வரும் மின் கட்டணத்தால் தொழில் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. மின்கட்டண உயா்வை தொடா்ந்து டிமாண்ட் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. குறைந்த அழுத்த மின் மாற்றிக்கான கட்டணம் ரூ.35லிருந்து, 2 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்து ரூ.184 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
இதேபோல உயா் அழுத்த மின்மாற்றிக்கான டிமாண்ட் கட்டணம் ரூ.550ல் இருந்து ரூ.562 ஆக அதிகரித்துள்ளது. மின்சாரம் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும், இந்த டிமாண்ட் கட்டணத்தை மாதந்தோறும் செலுத்த வேண்டும். இதனால் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் டிமாண்ட் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.
இந்த இக்கட்டான நிலையில் தொழில் நடத்த முடியாமலும், அண்டை மாநிலங்களுடன் தொழிலில் போட்டி போட முடியாத சூழலும் உருவாகி உள்ளது. எனவே டிமாண்ட் கட்டணத்தை பழையபடி குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.