திருமுருகன்பூண்டி நகராட்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
- தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகிறது.
- நீர்வள ஆதாரத்துறை சார்பில் அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டிருந்தது.
அனுப்பர்பாளையம் :
தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த சில மாதங்களாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நகராட்சி 10வது வார்டுக்கு உட்பட்ட சுள்ளிக்காட்டு தோட்டம் பகுதியில் உள்ள 58 வீடுகள் நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ளதாக நீர்வள ஆதாரத்துறை சார்பில் அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீடுகளை காலி செய்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து சென்றனர். இந்நிலையில் அப்பகுதியில் 8 வீட்டினர் மட்டும் பலமுறை கூறியும் வீடுகளை காலி செய்யாமல் இருந்து வந்தனர். இதையடுத்து நீர்வள துறை ஆய்வாளர் செல்வராஜ், திருமுருகன் பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், கிராம நிர்வாக அலுவலர் யுகேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் அனிதா ஆகியோர் முன்னிலையின் பொக்லைன் எந்திரம் மூலம் நீர் நிலை ஆக்கிரமிப்பில் இருந்த 8 வீடுகளை அகற்றினர். முன்னதாக வீடுகளில் இருந்த பொருட்களை பொதுமக்கள் அகற்றி மாற்று இடங்களில் வைத்தனர்.