டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஹாட்ஸ்பாட் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவு
- டெங்கு காய்ச்சல் பாதிப்பு யாருக்காவது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அப்பகுதியில் சிறப்பு முகாம் அமைத்தல் வேண்டும்.
- தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புடன் ஒருவர் அனுமதியானால் மாவட்ட அளவிலான கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
திருப்பூர்,செப்.26-
டெங்கு காய்ச்சல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விடும்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகராட்சி, நகராட்சி அளவில், ஏற்கனவே வகைப்படுத்தப்பட்ட தொற்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஹாட்ஸ்பாட் ஆக கண்டறிந்து அப்பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு யாருக்காவது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அப்பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து, காய்ச்சல் பாதித்தவர் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். செல்போன் குழுக்கள் மூலம் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புடன் ஒருவர் அனுமதியானால் மாவட்ட அளவிலான கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தெரியப்படுத்தாத மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.