திருப்பூர் மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
- மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
- உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
தமிழக மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.7.02 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் 2 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் குறித்தும், ரூ.30.14 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர்த்திட்ட பணிகள் குறித்தும், ரூ.177.69 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நொய்யல் ஆறு மேம்பாடு மற்றும் பொழுது போக்கு வசதிகள் செய்யும் பணிகள் குறித்தும், 54.36 கோடி மதிப்பீட்டில் மாநாட்டு அரங்கப்பணிகள் குறித்தும், ரூ.30.28 கோடி மதிப்பீட்டில் தினசரி சந்தை மேம்படுத்துதல் பணிகள் குறித்து என மொத்தம் ரூ.299.49 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து இந்த ஆய்வு கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், செல்வராஜ் எம்.எல்.ஏ, மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.