உள்ளூர் செய்திகள்

தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள். 

உடுமலை வனப்பகுதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்

Published On 2022-09-18 05:45 GMT   |   Update On 2022-09-18 05:45 GMT
  • கோவில் மலை அடிவாரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது.
  • சீனிவாச பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.

உடுமலை :

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவில் மலை அடிவாரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் மூலவராக ஏழுமலை வெங்கடாசலபதியும் உற்சவராக சீனிவாச பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள். இது தவிர கோவில் வளாகத்தில் வேணுகோபாலசாமிக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது.

இங்கு வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. நோய் தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வந்த நிலையில் இந்த ஆண்டு ஏழுமலையானை புரட்டாசி சனிக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் தயாராகி வந்தனர். இந்தநிலையில் நேற்று முதல் புரட்டாசி மாதம் முழுவதும் வருகின்ற சனிக்கிழமைகளில் பக்தர்கள் ஏழுமலையானை சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவே பக்தர்கள் கார், மோட்டார் சைக்கிள், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் மலை அடிவாரப்பகுதிக்கு வருகை தந்தனர்.

பின்னர் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் எழுப்பியும் பக்தி பாடல்களை செல்போன்களில் கேட்ட படியும் பக்தி பரவசத்தோடு மலை ஏறிச்சென்று ஏழுமலையானுக்கு தேங்காய், பழம், அவல் படைத்து வழிபட்டனர். நேற்று முதல் வாரம் என்பதால் பக்தர்கள் கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது. மலைவாழ்மக்கள் வனப்பகுதியில் இயற்கையாக விளைந்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அவற்றை பொதுமக்களும் ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர்.

விழாவையொட்டி வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் கணேஷ்ராம் வனத்துறையினருடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வருகிறவாரங்களில் பாதுகாப்பு பலப்படுத்துவதற்கும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன் கோவிலுக்கு வருகை தந்த பொதுமக்களுக்கு மலையடிவாரப் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வும் வனத்துறையினர் சார்பில் ஏற்படுத்தப்பட்டது.மேலும் வனவிலங்குகள் மற்றும் வனத்தின் இயற்கை தன்மையை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News