பி.ஏ.பி. கால்வாய்கள் தூர்வாரப்படாததால் 2-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல்
- முக்கிய கால்வாய்கள் பராமரிப்பே பரிதாபமாக உள்ளது.
- பகிர்மான கால்வாய்களின் நிலை படுமோசமாக உள்ளது.
உடுமலை :
பிரதான கிளை மற்றும் பகிர்மான கால்வாய்கள் பராமரிப்பு குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதால் திருப்பூர் மாவட்டத்தில் பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனம் குறித்த நேரத்தில் துவங்குவது கேள்விக்குறியாகியுள்ளது.
பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்துக்கு கடந்த ஆண்டு, டிசம்பர் 25-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, 5 சுற்றுகளாக 9,500 மில்லியன் கனஅடி நீர், திருமூர்த்தி அணையிலிருந்து வழங்கப்பட்டது.அந்த மண்டல பாசனம், மே மாதத்தில் நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு வரும் ஆகஸ்டு மாதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இந்த மண்டலத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட 94,201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.
பி.ஏ.பி., பாசனத்துக்கு தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வாயிலாக பெறப்படும் தண்ணீரே ஆதாரமாக உள்ளது. இக்கால்வாயில் கி.மீ., 30 முதல் 49 வது கி.மீ., வரை புதுப்பித்தல் பணிக்காக 72 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்தது.
பணிக்கான நிர்வாக ஒப்புதல், பிப்ரவரி 2021ல், பெறப்பட்டது. இந்நிலையில் இந்த புதுப்பித்தல் பணிகள் இதுவரை நிறைவு பெறவில்லை.தென்மேற்கு பருவமழையால் தொகுப்பு அணைகளான சோலையாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகள் நிரம்பிய போதும், திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது திருமூர்த்தி அணையின் நீர்மட்டம், 60 அடிக்கு 28.70 அடி மட்டுமே உள்ளது. ஆகஸ்டில், இரண்டாம் மண்டல பாசனம் குறித்த நேரத்தில் துவங்க, காண்டூர் கால்வாய் பணிகளை துரிதப்படுத்தி தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெற வேண்டும்.
திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., நான்கு மண்டலத்துக்குரிய 3.77 லட்சம் ஏக்கருக்கு பிரதான கால்வாய் வழியாகவே தண்ணீர் திறக்கப்படும். இந்த கால்வாய் பல இடங்களில் கரைகள் சரிந்து மண் கால்வாயாக மாறி விட்டது.தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை பகுதிகள் பாதிப்பதாக வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கரையில்லாத பிரதான கால்வாயில், நீரிழப்பு அதிகரிப்பதுடன் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, பாசனம் பாதிக்கும் நிலை உள்ளது.இரண்டாம் மண்டல பாசனம் துவங்கும் முன் படுமோசமாக உள்ள கால்வாயில், அடிப்படை பராமரிப்பு பணிகளையாவது மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.தற்போதே பணிகளை துவக்கினால் மட்டுமே, ஆகஸ்டில் தண்ணீர் திறக்கும் போது பணிகளை முடிக்க முடியும்.
முக்கிய கால்வாய்கள் பராமரிப்பே பரிதாபமாக உள்ள நிலையில், சுழற்சி முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே கிளை கால்வாய்களில், தண்ணீர் திறக்கப்படும்.இதனால் இரண்டாம் மண்டல பாசன கால்வாய்களே தற்போது தேடினால் கிடைக்காது. முறையான பராமரிப்பின்றி, புதர் மண்டி கால்வாயை கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. உடுமலை கால்வாய், புதுப்பாளையம் கிளை கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன்பாவது பொதுப்பணித்துறையினர் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும் என்பது விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.வழக்கமாக அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு இரண்டு நாட்கள் முன் கரையிலும் கால்வாயிலும் உள்ள புதர்களை அகற்றி விட்டு பாசனத்துக்கு தயாராவது பொதுப்பணித்துறையினர் வழக்கமாக உள்ளது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள கால்வாய்கள் நிலை இப்படி இருக்கும் போது, பாசன சபை கட்டுப்பாட்டிலுள்ள பகிர்மான கால்வாய்களின் நிலை படுமோசமாக உள்ளது. சமீபத்தில் பாசன சபைக்கு ஆர்வத்துடன் போட்டியிட்டு தேர்வான பாசன சபை நிர்வாகிகள் பகிர்மான கால்வாய்களை தூர்வார நிதியில்லாததால், திணறி வருகின்றனர்.வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பகிர்மான கால்வாய்களை தூர்வார மாவட்ட நிர்வாகத்துக்கு, கோரிக்கை மனு அனுப்பி காத்திருக்கின்றனர்.நீர் வளத்தை பாதுகாக்க, பொதுப்பணித்துறையிலிருந்து நீர்வளத்துறையை தனியாக பிரித்த தி.மு.க., அரசு, இரு மாவட்டத்திலும், பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் பி.ஏ.பி., பாசனத்திட்ட மேம்பாட்டிலும் அக்கறை காட்ட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.