ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் 3 லட்சம் மரக்கன்றுகள் நடத்திட்டம்!- சாமிநாதன் தொடங்கி வைத்தார்
- காவேரி கூக்குரல் மூலம் மரம் சார்ந்த விவசாயத்தை உலகம் முழுவதும் எடுத்து செல்கிறோம்.
- காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 3,00,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று (01-06-2024) நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் மரக்கன்றுகளை நட்டும், விவசாயிகளுக்கு வழங்கியும் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் உள்ள அண்ணன்மார் சுவாமி திருக்கோவில் வளாகத்தில் இதன் துவக்க விழா நடைப்பெற்றது.
இவ்விழாவில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில் "மரம் நடுவதில் நீண்ட பாரம்பரியமும், அனுபவமும் எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் 2000-ஆம் ஆண்டு முதல் இதற்காக இயங்கி வருகிறோம். 2006 ஆம் ஆண்டு நடந்த விழாவில் கலைஞர் அவர்கள் மரக்கன்று நட்டு துவங்கி வைத்த இயக்கம், இன்று உலக அளவில் பெயர் பெரும் வகையில் வளர்ந்து இருக்கிறது. இவ்வியக்கத்தை ஐநாவின் 4 அமைப்புகள் அங்கீகரித்து உள்ளது.
காவேரி கூக்குரல் மூலம் மரம் சார்ந்த விவசாயத்தை உலகம் முழுவதும் எடுத்து செல்கிறோம். விவசாயத்துடன் மரங்களை நடும் போது விவசாயிகளின் பொருளாதாரம், மண்ணின் வளம் மற்றும் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். சுற்றுச்சூழலையும், பொருளாதாரத்தையும் இணைத்து சத்குரு கொடுத்தார்கள். வெப்ப மண்டல நாடுகளில் இந்த காவேரி கூக்குரல் திட்டம் தான் சரியான தீர்வு என்று கூறி ஐநா அமைப்பு இதனை அங்கீகரித்து உள்ளது" எனக் கூறினார்.
மேலும் அமைச்சர் சாமிநாதன் அவர்கள் பேசுகையில் "கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது ஈஷா இயக்கத்தின் மரக்கன்றுகள் நடுகிற நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நடைப்பெற்றது. அது இன்னும் பசுமையாக என் மனதில் நினைவு இருக்கிறது. காரணம் நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அன்று நெடுஞ்சாலை துறையின் சார்பாக சாலை ஓரங்களில் மரங்கள் நடப்படுவதை அவர் பெருமையாக சுட்டிக்காட்டினார். அன்று அத்துறையின் அமைச்சராக நான் இருந்தேன் என்பதை பெருமையாக கருதுகிறேன்.
கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது தன்னை பார்க்க வருகிறவர்கள் பரிசுப் பொருளை விட ஒரு மரக் கன்றை நடுவதாக இருந்தால் நேரில் வரவில்லை என்றாலும் கூட பாராட்டுவேன், வாழத்துவேன் என்றுக் கூறினார். வெப்பம் அதிகரித்து இருக்கும் தற்போதைய கடுமையான சூழலில் நாம் சிரமபட்டுக் கொண்டு இருக்கிறோம். இந்த சூழலில் மரக்கன்றுகள் நடுவதும் அதனை பராமரிப்பதும் இந்த மாதிரியான இயக்கங்கள் மட்டும் இல்லாமல் ஒவ்வொருவரின் தலையாய கடமை ஆகும். இந்நேரத்தில் காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு என்னுடையப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறினார்.
காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது.
மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.