திருப்பூரில் வேகமெடுக்கும் உள்நாட்டு ஆடை உற்பத்தி
- கோடைக்கால ஆடைகள் அதிக அளவில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
- தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் வருகையால் பின்னலாடை துறை எழுச்சி பெறும்.
திருப்பூர்:
கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை, நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. மும்பையில் நாளுக்கு நாள் மழை தீவிரமடைந்து வருகிறது.இது குறித்து லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலர் மோகனசுந்தரம் கூறியதாவது:-
திருப்பூரில் உள்நாட்டு சந்தைக்கான பின்னலாடை உற்பத்தி சில மாதங்களாக சற்று வேகமெடுத்துள்ளது. ஏப்ரல் முதல் இம்மாதம் வரை கோடைக்கால ஆடைகள் அதிக அளவில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருப்பூரின் ஆடை வர்த்தகத்தில் 30 சதவீதம் மும்பை சந்தையை சார்ந்துள்ளது. மழையால் தற்போது மும்பையில் ஆடை வர்த்தகம் சரிந்துள்ளது.
இதனால் திருப்பூரிலிருந்து ஆடை கொள்முதல் செய்வதை மும்பை வர்த்தகர்கள் குறைத்து வருகின்றனர். மழை தீவிரமடையும் போது வழித்தடங்கள் பாதிக்கப்பட்டு சரக்கு அனுப்புவதும் தடைபடும். வெயில் நீடிப்பதால் ஆந்திரா, டில்லி, பீஹார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு கோடைக்கால ஆடை ரகங்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன.
பருவமழை தீவிரமடைந்து செப்டம்பர் வரை திருப்பூரின் உள்நாட்டு ஆடை வர்த்தகத்தை பாதிக்க செய்யும். அதன் பின் தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் வருகையால் பின்னலாடை துறை எழுச்சி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.