கூட்டுறவுத்துறையில் வேலைவாய்ப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற கூடாது - கலெக்டர் வினீத் தகவல்
- உறுப்பினர்களுக்கு மட்டும் பொறுப்பாக்கப்பட்ட அமைப்பாகும்.
- கூட்டுறவு சங்கம், பதிவு எண் டி.எண். 20-0001095 என்ற பெயரில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியி–ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் என்பது முற்றிலும் தன்னாட்சி அதிகாரம் பெற்று, அதன் உறுப்பினர்களுக்கு மட்டும் பொறுப்பாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த வகை சங்கங்கள் மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தின், மத்திய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் நிர்வாக கட்டுப்பாட்டிலோ அல்லது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் நிர்வாக கட்டுப்பாட்டிலோ செயல்படுவது அல்ல.
எனவே பொதுமக்களும், முதலீடுதாரர்களும் மேற்படி சங்கங்களின் செயல்திறனை அடிப்படையாக கொண்டு வைப்புத்தொகையை முதலீடு செய்வது தொட–ர்பான முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் நிதி இழப்பிற்கு கூட்டுறவு அமைச்சகத்தின் மத்திய பதிவாளரோ அல்லது மாநில பதிவாளரோ இந்த வைப்பீடுகளுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை. எனவே இவற்றில் முதலீடு செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிய நிரந்தர பணியாளர்கள் தேவை என http:www.olx.in என்ற வலைதள முகவரியில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிய நிரந்தர பணியாளர்கள் தேவை என்றும், மாத சம்பளமாக ரூ.13 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படுவதாகவும், சேலம், பவானி, பெருந்துறை, அவினாசி, திருப்பூர், நாமக்கல் ஆகிய இடங்களில் பணியிடங்கள் உள்ளதாகவும், வயது 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும் எனவும், தொடர்புக்கு 82203-03402, 95970-49997 ஆகிய எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சேலம் மாவட்ட நெசவாளர்கள் மற்றும் டெக்ஸ்டைல் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், பதிவு எண் டி.எண். 20-0001095 என்ற பெயரில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்த போது, இப்படி ஒரு சங்கம் கூட்டுறவுத்துறையின் கீழோ அல்லது கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கீழோ பதிவு செய்யப்படவில்லை என தெரியவருகிறது. 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம், 1988-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளில் திருத்தப்பட்ட விதிகளின்படி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள, கூட்டுறவு சங்கங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் முறையான அறிவிப்பு வழங்கப்பட்டு, முறையான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மேலும், தற்போது வாட்ஸ் அப், இணையதளம், குறுஞ்செய்தி மற்றும் இதர மின்னணு ஊடகங்கள் மூலம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பணி வழங்கப்படுவதாகவும், இதற்கு முன்பணம் செலுத்தி பயிற்சி பெற்றால் நிரந்த பணி வழங்கப்படும என போலியான விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் மட்டுமே பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டு உரிய முறையில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு, பணி வழங்கப்பட்டு வருகிறது. எனவே வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில், சமூக வலைதளத்தில் வெளியிடப்படும் போலி விளம்பரங்களை யாரும் நம்பி ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.