அவினாசி கோவில் தேரோட்டம் தேர் செல்லும் ரத வீதிகளில் வாகனங்கள் மூலம் அன்னதானம் வழங்கக்கூடாது - கோவில் நிர்வாகம் அறிவுரை
- தேரோட்டம் 2-ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது.
- திருமண மண்டபங்களில் கட்டாயமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
அவினாசி :
அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகரம் தொடும் நிகழ்ச்சியான தேரோட்டம் 2-ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது. தேர்த்திருவிழாவின் போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். எனவே அது தொடர்பான ஆலோசனை கூட்டம் அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டி, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அவினாசியை சேர்ந்த மண்டபம் உரிமையாளர்கள், நிர்வாகிகள், அன்னதான கமிட்டியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள் வருமாறு:- திருமண மண்டபங்களில் கட்டாயமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். அவசியம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொது மக்களுக்கு பாதுகாப்பான முறையில் உணவு தயாரித்து வழங்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் மற்றும் தொற்றுநோய் பாதிக்கப்பட்ட பணியாளர்களை உணவு சமைக்க, பரிமாற அனுமதிக்க கூடாது. உணவு தயாரிக்க தரமான சமையல் பொருட்கள் மற்றும் குளோரினேசன் செய்யப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தேர் செல்லும் நான்கு ரத வீதிகளில் வாகனங்கள் மூலம் அன்னதானம் வழங்கக்கூடாது. உணவு தயாரிக்க பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் அனுமதி சீட்டு பெற்று குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். மீதமான உணவுப் பொருட்களை எக்காரணம் கொண்டும் வடிகால்களிலோ, சாலைகளிலோ, பொது இடங்களிலோ கொட்ட கூடாது. உணவு பாதுகாப்பு துறை மூலம் உணவு மாதிரிகள் சேகரிக்கப்படுவதால் தரமான பொருட்களை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் கொள்முதல் செய்து பயன்படுத்தி அன்னதானம் வழங்க வேண்டும். திருமண மண்டபங்களில் தேர்வரும் நேரங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்த கழிவறைகளை அன–மதிக்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.