உடுமலையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
- போதைப்பொருள் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- போதைப் பொருட்கள் பயன்பாட்டால் சமூகத்துக்கும் தனி மனிதனுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
உடுமலை :
உடுமலை பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அதன் ஒருபகுதியாக பொதுமக்களிடையே போதைப் பொருட்கள் பயன்பாட்டால் சமூகத்துக்கும் தனி மனிதனுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கும் வகையில் உடுமலை உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையில் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் என 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.மேலும் உடுமலை ஆர்டிஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கடந்த காலங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டு நன்னடத்தை குற்ற பிணை சான்றிதழ் வழங்கப்பட்டது.மேலும் அனைவரும் உடலையும் உள்ளத்தையும் பாதிக்கும் போதைப் பொருளை அறவே ஒழிப்போம்.
சமூகத்தில் போதைப்பொருள் புழங்குவதை இயன்றவரை தடுப்பதற்கு முயற்சி செய்வேன் என்பது உள்ளிட்ட போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல்,இன்ஸ்பெக்டர் ராஜ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.