உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் - கலெக்டர் அறிவிப்பு
- 9-ந் தேதி ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
- விடுமுறை வழங்காத பட்சத்தில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி, குடிமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற 9-ந் தேதி ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி அவினாசி ஒன்றியத்தில் உப்பிலிபாளையம், ராமநாதபுரம் 16-வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், அய்யம்பாளையம் 6-வது வார்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், பல்லடம் ஒன்றியத்தில் இச்சிப்பட்டி 1-வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊத்துக்குளி ஒன்றியத்தில் இச்சிப்பாளையம் ஊராட்சி தலைவர், குடிமங்கலம் ஒன்றியம் குடிமங்கலம் 1-வது வார்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
இடைத்தேர்தல் நடக்கும் கிராம ஊராட்சி பகுதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு தேர்தல் நடக்கும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.