ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு ரதம்
- குடும்பநல அறுவைசிகிச்சை ஏற்கும் ஆண்களுக்கு ரூ.3,100 அன்பளிப்பு வழங்கப்படும்.
- குடும்பநலச்செயலகம் சார்பாக ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை ரதம் .
திருப்பூர் :
மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்ட குடும்பநல செயலகம் சார்பாக ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை நவீன வாசக்டமி இருவார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு ரதத்தினை கலெக்டர் வினீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்தாவது:- திருப்பூர் மாவட்ட குடும்பநலச்செயலகம் சார்பாக ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை நவீன வாசக்டமி இருவார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு ரதம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரதம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் நகர்வலம் வரும். இதுகுறித்த விளம்பர கையேடுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் விளக்க கையேடு, முகாம் நடைபெறும் தேதிகள் அடங்கிய கைபிரதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த இருவார விழாவினை முன்னிட்டு ஆண்களுக்கான குடும்பநல அறுவைசிகிச்சை முகாம்கள் தொடர்ந்து நடைபெற உள்ளன. குடும்பநல அறுவைசிகிச்சை ஏற்கும் ஆண்களுக்கு ரூ.3,100 அன்பளிப்பு வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்முருகேசன், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) கனகராணி, துணை இயக்குநர் (குடும்பநலம்) கௌரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.