சின்ன வெங்காய சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
- விதை வெங்காயத்தை பல விவசாயிகள் கொள்முதல் செய்வதால் அதன் தேவை அதிகரித்துள்ளது.
- வைகாசி பட்டத்தில் நடவு செய்யும் சின்ன வெங்காயத்தை அதிக நாட்கள் இருப்பு வைக்க முடியும்.
உடுமலை :
தற்போது வைகாசி பட்டம் துவங்கியுள்ளது. குளிர்ந்த காற்று, அளவான வெப்பநிலை காணப்படுவதால் இந்த சீசனில் வெங்காயம் ஆரோக்கியமாக வளரும். கூடுதல் மகசூல் கிடைக்கும். இதை எதிர்பார்த்து விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விதை வெங்காயத்தை பல விவசாயிகள் கொள்முதல் செய்வதால் அதன் தேவை அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்துவிலை 55 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஓராண்டு பயிர்களான வாழை, மஞ்சள், மரவள்ளி போன்றவை இந்த சீசனில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கூடுதல் வருவாய் ஈட்டவும், முதன்மை பயிரை பாதிக்காத வகையில் சின்ன வெங்காயம் இருப்பதாலும் விவசாயிகள் அதை ஊடுபயிராக சாகுபடி செய்கின்றனர்.விவசாயிகள் கூறுகையில், வைகாசி பட்டத்தில் நடவு செய்யும் சின்ன வெங்காயத்தை அதிக நாட்கள் இருப்பு வைக்க முடியும். ஐப்பசி, கார்த்திகை மாதத்தில் அறுவடை இருக்காது. அந்த சீசனில் அதிக விலை கிடைக்கும்.
இந்த ஆண்டு மழை அதிகம் பொழிந்ததால் கிணறு, ஆழ்குழாய் கிணறுகளில் போதுமான நீர் வளம் உள்ளது. இந்த சீசனில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. இது சின்ன வெங்காய சாகுபடிக்கு சாதகமாக அமைந்துள்ளது என்றனர்.