சின்னவெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
- கடந்த ஆண்டு அதிக மழை உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் பாதித்தது.
- சின்னவெங்காய நாற்றுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்தனர்.
உடுமலை :
உடுமலை சுற்றுப்பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு இரு சீசன்களில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு பிடிக்கும் சாகுபடியாக சின்னவெங்காயம் உள்ளது.இதனால் இச்சாகுபடியில் அதிக விளைச்சல் பெற விவசாயிகள் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். கடந்த ஆண்டு அதிக மழை உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் பாதித்தது. போதிய விலையும் கிடைக்கவில்லை.
இருப்பு வைத்தும் விலையில் மாற்றம் இல்லாததால், ஏமாற்றத்துடன் சின்னவெங்காயத்தை விற்பனை செய்தனர். இந்நிலையில் இந்த கோடை சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
முன்பு சின்னவெங்காயத்தை நேரடியாக நடும் முறையை பின்பற்றினர். பின்னர் வீரிய ரக விதைகளை நட்டனர். தற்போது விதைகளை கொண்டு மொத்தமாக, நாற்று உற்பத்தி செய்து குறிப்பிட்ட நாட்கள் வளரச்செய்து அதன் பின்னர் போதிய இடைவெளி விட்டு நாற்றுகளை நடவு செய்கின்றனர்.முன்பு நாற்றுக்கு தட்டுப்பாடு அதிகரித்து ஒரு பாத்தி அளவிலான சின்னவெங்காய நாற்றுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சின்னவெங்காயத்துக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதுடன் சாகுபடி செலவும் கூடுதலாகும். கோடை சீசனில் நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளதால் சாகுபடி பரப்பு குறைவாகவே இருக்கும். எனவே தேவை அதிகரித்து விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். வீரிய ரக விதைகளை தோட்டக்கலைத்துறை வாயிலாக வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.