விவசாய நிலங்களில் வீசப்படும் மதுபான காலி பாட்டில்களால் விவசாயிகள் அவதி
- இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
- கண்ணாடி பாட்டிலின் சிதறல்கள் கால்களில் குத்தி கிழிக்கிறது.
பல்லடம் :
தமிழ்நாட்டில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.மதுபான கடைகள் அதிகரிப்பால், மதுபானம் குடிப்பவர்கள் எண்ணிக்கையும் மளமளவென அதிகரித்து வருகிறது. போதை ஒரு தீய பழக்கம் என்பது போய் தற்பொழுது இளைஞர்களிடையே அது "பேஷன்" ஆகி வருகிறது. இந்த நிலையில், சிலர் மதுபானங்களை வாங்கி வந்து வாய்க்கால் மற்றும் விவசாய நிலங்கள் அருகே குடித்துவிட்டு, அங்கேயே வீசி சென்று விடுகின்றனர். இதனால் விவசாயிகள் உழவுப் பணி மேற்கொள்ளும் போது உடைந்த கண்ணாடி பாட்டிலின் சிதறல்கள் கால்களில் குத்தி கிழிக்கிறது. இதனால் விவசாயிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
மேலும் மேய்ச்சல் நிலங்களில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகளை கால்நடைகள் உண்ணுவதால் அவற்றின் வயிற்றில் சிக்கி கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. எனவே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து திறந்தவெளிகள், விவசாய நிலங்கள் போன்றவற்றில் மது அருந்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.