மொச்சை சாகுபடி விதை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்
- 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
- அரசு வழங்கிய பவர் டில்லர் பழுதடைந்து உழவு செய்தல் உள்ளிட்ட பணிகள் பாதித்தது.
உடுமலை :
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்துக்குட்பட்டது ஈசல்திட்டு மலைவாழ் கிராமம். ஜல்லிபட்டி ஊராட்சி லிங்கம்மாவூர் சமவெளிப்பகுதியிலிருந்து 1,208 மீட்டர் உயரத்திலுள்ள மலையில் இந்த கிராமம் அமைந்துள்ளது.2மலைத்தொடர்களின் இடைவெளியில் அமைந்துள்ள இந்த கிராமத்தையொட்டி 400 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் அக்கிராம மக்கள் பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகின்றனர்.குறிப்பாக 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கம்பு, ராகி, மொச்சை ஆகிய மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
பிற சாகுபடி மேற்கொள்ளும் போது, சமவெளிப்பகுதிக்கு விளைபொருட்களை கொண்டு வர வழித்தடம் இல்லை. எனவே அப்பகுதியினருக்கு மொச்சை சாகுபடி மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது.இந்நிலையில் கடந்த, 2009ல் அப்பகுதியினரின் விவசாய சாகுபடி பணிகளுக்காக அரசு வழங்கிய பவர் டில்லர் பழுதடைந்து உழவு செய்தல் உள்ளிட்ட பணிகள் பாதித்தது.
தொடர் கோரிக்கை அடிப்படையில் சமீபத்தில் ஈசல்திட்டு மலைவாழ் கிராமத்துக்கு 2 பவர் டில்லர் எந்திரங்களை அரசு ஒதுக்கீடு செய்தது.அங்குள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் குழு வாயிலாக எந்திரத்தை பயன்படுத்தி சமீபத்திய மழைக்குப்பிறகு, சாகுபடிக்கு விளைநிலத்தை தயார் செய்துள்ளனர். ஆனால் விதைப்புக்கு தேவையான மொச்சை விதை கிடைக்காமல் பணிகள் முடங்கியுள்ளது.
குறித்த நேரத்தில் விதைப்பு செய்யாவிட்டால், போதிய விளைச்சல் கிடைக்காது என்பதால் கவலையடைந்துள்ளனர். இது குறித்து ஈசல் திட்டு கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் கூறியதாவது:- பல்வேறு காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக, எவ்வித சாகுபடியும் மேற்கொள்ளவில்லை. தற்போது பவர் டில்லர் எந்திரம் வழங்கியுள்ளதால் சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தினோம். ஆனால் மொச்சை விதை கிடைக்கவில்லை.எனவே வேளாண்துறை வாயிலாக விதை வழங்கினால்,நூற்றுக்கணக்கான ஏக்கரில் இச்சாகுபடி மேற்கொள்ள முடியும். எங்களுக்கு வாழ்வாதாரமும் கிடைக்கும்.அதே போல் சாகுபடியில், பூச்சி, நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளிப்பதற்கான ஸ்பிரேயரும் மானியத்தில் வழங்க வேண்டும். இதனால் சாகுபடியில் போதிய விளைச்சல் கிடைக்கும். இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்றார்.