உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பால் கொள்முதல் விலை கட்டுபடியாகாததால் கறவை மாடுகளை வளர்க்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

Published On 2022-07-26 08:47 GMT   |   Update On 2022-07-26 08:47 GMT
  • விவசாயத்தை மட்டும் நம்பி உள்ளோர் நிலையான வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர்.
  • கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் பலர் கறவை மாடுகளை வளர்த்து வருகின்றனர். பால் கொள்முதல் விலை கட்டுபடியாகாததால் பால் உற்பத்தியாளர்கள் சிரமப்படுகின்றனர்.விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை. பூச்சி மருந்து, உரம் விலையும், தொழிலாளர்களுக்கான கூலியும் உயர்ந்து விட்டது.நிலத்தடி நீர்மட்டமும் பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

விவசாயத்தை மட்டும் நம்பி உள்ளோர் நிலையான வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர்.கூடுதல் வருமானத்திற்காக பெரும்பாலான தோட்டங்களில் கறவை மாடுகள் வளர்த்து வருகின்றனர். தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பால் உற்பத்தி கட்டுப்படியாவதில்லை என்கின்றனர் விவசாயிகள்.

தமிழக அரசு 4.3 சதவீத கொழுப்பு சத்தும், 8.2 சதவீத புரதச் சத்தும் கொண்ட பாலுக்கு ஒரு லிட்டருக்கு 32 ரூபாய் அறிவித்துள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு ஒரு லிட்டருக்கு 29 முதல் 30 ரூபாய் தான் கிடைக்கிறது.கலப்பு தீவனம் கிலோ 24 ரூபாயாக உயர்ந்துள்ளது. பருத்தி, புண்ணாக்கு கிலோ 50 ரூபாயாகவும், சோளத்தட்டு, வைக்கோல், மக்காச்சோளம் ஆகியவற்றின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இத்துடன் தொழிலாளர்களுக்கான கூலி, பராமரிப்பு செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. எனினும் அரசு ஆவின் கொள்முதல் விலையை பல ஆண்டுகளாக உயர்த்தவில்லை. விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை இல்லாததால் சிரமமான நிலையில் பால் உற்பத்தி மட்டுமே வாழ்வாதாரத்திற்கு உதவியாக உள்ளது.தற்போது தீவன விலை உயர்வால் பால் உற்பத்தியும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசு மாட்டுப்பால் ஒரு லிட்டருக்கு 45 ரூபாய் வழங்க வேண்டும். கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்.விவசாயிகளின் தோட்டங்களுக்கே வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லா விட்டால் பலரும் கறவை மாடுகளை விற்கும் நிலை ஏற்பட்டு விடும் என்கின்றனர் விவசாயிகள்.

Tags:    

Similar News