உள்ளூர் செய்திகள்

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி. 

புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைக்க நிதி உதவி - தொழில்துறையினர் வழங்கினர்

Published On 2022-10-13 11:04 GMT   |   Update On 2022-10-13 11:04 GMT
  • நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
  • பொதுமக்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து 33 சதவீத பங்களிப்பு நிதியாகவும் செயல்படுத்தப்பட உள்ளது.

திருப்பூர் :

தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.60 கோடி மதிப்பில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ரோட்டரி சங்கம் மற்றும் தன்னார்வலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ தீர்வு காண அதிநவீன திட்டத்தை தமிழ்நாடு அரசுடன் இணைந்து தன்னார்வ அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் அறிதலுக்கும், சிகிச்சைக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.60 கோடியாகும். நமக்கு நாமே திட்டம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி இணைந்து 67 சதவீத பங்களிப்பு நிதியாகவும், பொதுமக்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து 33 சதவீத பங்களிப்பு நிதியாகவும் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த மருத்துவமனையில் பெட் ஸ்கேன் கருவி, 38 படுக்கை வசதியுடன் கூடிய இரு அறைகள், 2 அறுவை சிகிச்சை அரங்கம், புற்றுநோயியல் அரங்கம், கேத் ஆய்வகம், ஆய்வக கருவிகள், 9 மினி ஆய்வக அறைகள், 16 மருத்துவ அறைகள், 1 லினியர் ஆக்ஸிலரேட்டர் என ரூ.60 கோடியில் அமைய உள்ளது. பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியை அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் ரூ.5 லட்சம், பொதுச்செயலாளர் திருக்குமரன் ரூ.5 லட்சம், துணை தலைவர் இளங்கோவன் ரூ.5 லட்சம், பையிங் ஏஜெண்ட் ரூ.5 லட்சம், சாய ஆலை சங்க தலைவர் காந்திராஜன் ரூ.50 லட்சம், டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் சங்க தலைவர் நாகேஷ் ரூ.25 லட்சம், சுலோச்சனா ஸ்பின்னிங் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் ரூ.25 லட்சம், ரோட்டரி சங்கத்தின் சார்பாக ரூ.5 கோடி, கைலாஷ் மார்பிள்ஸ் சார்பாக ரூ.25 லட்சம், ரோட்டரி கிளப் ஆப் ஸ்மார்ட் சிட்டி ரூ.5 லட்சம் வழங்குவதற்கு ஒப்புதல் மற்றும் காசோலைகளை வழங்கினார்கள்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் வினீத், மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News