எண்ணும் எழுத்தும் திட்ட ஆன்லைன் தேர்வுக்கு டேப்லெட் வழங்க வேண்டும் - கருத்தாளர்கள் வலியுறுத்தல்
- தினசரி வகுப்பில் சொல்லி தர வேண்டிய செயல்பாடுகள் அட்டவணைப்படுத்தப்படும்.
- அதிக மாணவர்கள் படிப்பதால் 10 பேருக்கு ஒரு டேப் வீதம், பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.
திருப்பூர்:
எண்ணும் எழுத்தும் திட்டத்தை, ஐந்தாம் வகுப்பு வரை விரிவுப்படுத்துவதால் ஆன்லைன் தேர்வு நடைமுறைகளுக்கு டேப்லெட் வழங்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொரோனாவுக்கு பின் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளி குறைக்க கடந்த ஆண்டு மூன்றாம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.இத்திட்டத்தில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், 10 சதவீதம் மட்டுமே கையாளப்படுகிறது. மீதமுள்ள 90 சதவீதத்திற்கு எண்ணும் எழுத்தும் திட்ட, பயிற்சி கையேடு மட்டுமே சொல்லி தரப்படும். தினசரி வகுப்பில் சொல்லி தர வேண்டிய செயல்பாடுகள் அட்டவணைப்படுத்தப்படும்.
இத்திட்டத்தை சிறப்பாக தொடர மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப டேப்லெட் கம்ப்யூட்டர் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. எண்ணும் எழுத்தும் திட்ட முதன்மை கருத்தாளர்கள் கூறுகையில், எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு வாரம் ஒருநாள் எழுத்துத்தேர்வு நடத்த வேண்டும். ஆன்லைன் தேர்வாக நடத்தி இயக்குனரகத்தில் இருந்து மாணவர்களின் கற்றல் திறன் மதிப்பிடப்படுகிறது.
இதை ஆசிரியர்களின் மொபைல் போன் வழியாக மேற்கொள்ள சிரமமாக உள்ளது.5-ம் வகுப்பு வரை, விரிவுப்படுத்தப்பட்ட நிலையில் அதிக மாணவர்கள் படிப்பதால் 10 பேருக்கு ஒரு டேப் வீதம், பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். அடுத்த கல்வியாண்டில் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதால் டேப் வழங்க ஆவண செய்ய வேண்டும் என்றனர்.