மத்திய அரசு பணிக்கான இலவச பயிற்சி 24-ந் தேதி தொடங்குகிறது
- ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் பணியில் 7500 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வாயிலான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- 1.1.2023-ம் நாளன்று 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கு அனுபவமிக்க சிறப்பு வல்லுநர்களை கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் பணியில் 7500 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வாயிலான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 3.5.2023 ஆகும். இத்தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விளம்பர அறிவிப்பை பார்த்து தெளிவு பெற்று விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 1.1.2023-ம் நாளன்று 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., அல்லது எஸ்.டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஓ.பி.சி .,பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
இத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத் தேர்வு ஜூலை 2023-ல் நடைபெறும். 1 மணி நேரம் நடைபெறும் இத்தேர்வில் 100 கேள்விகளுக்கு 200 மதிப்பெண்கள் வீதம் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு தவறான கேள்விக்கும் 0.50 மதிப்பெண் குறைக்கப்படும். இத்தேர்விற்கு கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.மேலும் வரும் 24.4.2023 திங்கள்கிழமையன்று இலவச பயிற்சி தொடங்கப்பட்டு தொடர்ந்து திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும்.
எனவே, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் மேற்கண்ட தேர்விற்கு நேரடியாக தாங்களே இணைய வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தகவலுக்கு பல்லடம் சாலை, திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் 4-வது தளத்தில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரில் அல்லது 9499055944 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு இளைஞர்கள் பயனடையுமாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.