உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

அரசு மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் - சப்-கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2023-06-03 10:16 GMT   |   Update On 2023-06-03 10:16 GMT
  • பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது.
  • மருத்துவர்கள் இருந்தும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டினர்.

பல்லடம் :

பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சுகாதாரதுறை இணை இயக்குனர் கனகராணி, பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.டாக்டர் சுபா வரவேற்றார்.

இதில் கலந்துகொண்ட தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள், பல்லடம் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்படுவதில்லை என்றும், எதற்கெடுத்தாலும் திருப்பூர், கோவை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பதாகவும், போதுமான மருத்துவர்கள் இருந்தும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டினர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக சப் கலெக்டர் கூறினார். பின்னர் அவர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் சிகிச்சை பெறும் அறை உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பழைய துருப்பிடித்த கட்டில்கள் மற்றும் சக்கர நாற்காலி, ஸ்ட்ரெச்சர் ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்ததோடு பயன்பாடற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

மேலும் அரசு மருத்துவர்கள் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் கட்டாயம் அடையாள அட்டைகளை அணிந்திருக்க வேண்டும், பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை மற்றும் முன்னெச்சரிக்கை பலகைகளை அமைக்க வேண்டும், மேலும் அரசு மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதில் தலைமை டாக்டர் ராமசாமி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள்,அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News