பழைய எலக்ட்ரிக்கல் கழிவுகளை ஒப்படைக்க வேண்டும் - திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்
- எரிய கூடிய கழிவுகள் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்புதல் போன்ற பணிகள் நடக்கிறது.
- ரெடியூஸ் ரீயூஸ் ரீசைக்கிள் மையத்தில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒப்படைக்க வேண்டும்.
திருப்பூர் :
திமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனர் அப்துல் ஹாரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவது :- திருமுருகன்பூண்டி நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி மூலம் வீடு, வீடாக மற்றும் கடைகள் தோறும் சேகரமாகும் அனைத்துவித கழிவுகளும் பல்வேறு நிலைகளாக தரம் பிரித்து நகரில் 2 இடங்களில் உள்ள உரம் தயாரிக்கும் மையங்கள் மூலம் உரம் தயாரித்தல், விற்பனை செய்யக் கூடிய கழிவுகளை விற்பனை செய்தல், எரிய கூடிய கழிவுகள் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்புதல் போன்ற பணிகள் நடக்கிறது.
திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகள் 2016-ன் படி செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அனைத்து வித எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள், மின்னணு உபகரணங்கள் போன்ற பொருட்கள் பூமியில் சேர்வதை தடுக்கும் வகையிலும், அவைகளை அரசின் அனுமதி பெற்ற நிறுவனங்களில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் . நமது நகராட்சிப் பகுதிகளில் கழிவுகளை நகராட்சி மூலம் சேகரித்து அரசின் அனுமதி பெற்ற நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளதால், இனிவரும் காலங்களில் பொதுமக்கள் தங்கள் வீடு, வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பயனற்ற நிலையில் உள்ள கழிவுகளான எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள், பயனற்ற கடிகாரங்கள், ரேடியோக்கள், டி.வி., செல்போன்கள் மற்றும் அதன் உதிரி பாகங்ள், உள்ளிட்ட கழிவுப் பொருட்களை நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள ரெடியூஸ் ரீயூஸ் ரீசைக்கிள் (ஆர்.ஆர்.ஆர்) மையத்தில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை ஜூன் மாதம் 4-ந் தேதி வரை ஒப்படைத்து நகரில் தூய்மையினை காக்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.