உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

இந்து மதத்தை இழிவுபடுத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம் - இந்து முன்னேற்ற கழக தலைவர் வக்கீல் கே.கோபிநாத் பேச்சு

Published On 2023-09-20 10:46 GMT   |   Update On 2023-09-20 10:46 GMT
  • விநாயகர் சதுர்த்தி எழுச்சி திருவிழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று திருப்பூரில் நடைபெற்றது
  • இந்து பண்பாடு, கலாசாரத்தை காக்க இந்து முன்னேற்ற கழகம் போராடும்

திருப்பூர் : 

இந்து பண்பாட்டை காக்க இந்து முன்னேற்ற கழகம் போராடும் என்று திருப்பூரில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டத்தில் அமைப்பின் தலைவர் வக்கீல் கே.கோபிநாத் பேசினார். விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னேற்ற கழகம் சார்பில் 10-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி எழுச்சி திருவிழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று திருப்பூரில் நடைபெற்றது. இந்து முன்னேற்ற கழகம் சார்பில் வைக்கப்பட்ட 20 விநாயகர் சிலைகள் கொங்கணகிரி கோவில் முன்புறம் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆலங்காட்டுக்கு வந்தது. பின்னர் இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு இந்து முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் எம்.எஸ்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். இந்து முன்னேற்ற கழக தலைவர் வக்கீல் கே.கோபிநாத் பேசியதாவது:-

 இந்துக்களுக்கு என்று இருக்கும் ஒரே நாடு இந்தியா தான். இங்கு மதத்தை வைத்து சிலர் பிழைப்பு நடத்துகிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இந்துக்கள் சிலை வைக்கக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது. அதற்கு இந்து அமைப்புகளே தடையாக இருப்பது தான் வேதனையானது. நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரை விரட்ட விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இந்துக்கள் ஒற்றுமையுடன் எழுச்சி விழாவாக கொண்டாடவே விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. இந்து மதத்தை இழிவுபடுத்தினால் அதை வேடிக்கை பார்க்க மாட்டோம். இந்து மதத்துக்கும், இந்து உணர்வுக்கும், இந்து பெண்களுக்கும், இந்து பண்பாடு, கலாசாரத்தை காக்க இந்து முன்னேற்ற கழகம் போராடும். இளைஞர்கள் இந்து பண்பாட்டை காக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஸ்ரீகாந்த், இந்து தேசிய கட்சி நிறுவனர் மணி, இந்துஸ்தான் மக்கள் இயக்கம் நிறுவனர் மணி, அகில இந்திய இந்து மகா சபா மாவட்ட தலைவர் வல்லபை பாலா மற்றும் நிர்வாகி சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நிர்வாகிகள் ராதா சுதீஷ், அருண்குமார், பன்னீர்செல்வம், அசோக் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டம் முடிந்ததும் விநாயகர் சிலைகள் வாகனங்கள் மூலமாக சாமளாபுரம் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

Tags:    

Similar News