அரசியல் ஆதாயம் தேடுவோரிடம் இந்துக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - இந்து முன்னணி அறிக்கை
- திரவுபதி அம்மன் கோவிலில் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சினை என அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
- சிலர் சமூக அமைதியை கெடுக்க பிரச்சினையை உருவாக்குகின்றனர்.
திருப்பூர் :
கோவில் விவகாரத்தில் சமூக நல்லிணக்கம் மேற்கொள்வது போல் கபட நாடகம் நடத்தப்பட்டுள்ளது என்று இந்து முன்னணி சாடியுள்ளது. இது குறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சினை என அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் மேல்பதி வீரணம்பட்டி காளி கோவிலிலும் இதே காரணத்தால் பூட்டி சீல் வைத்தனர்.சிலர் சமூக அமைதியை கெடுக்க பிரச்சினையை உருவாக்குகின்றனர். இந்து சமுதாயம் அனுமதிக்கக்கூடாது. இந்து சமுதாய ஒற்றுமை அவசியம். சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவோரிடம் இந்துக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இரு சமூகங்களிடையே பிரச்னை என்றால் அதிகாரிகள் பேச்சு நடத்தி, சமூக பெரியவர்களை அழைத்து சுமூக முடிவு எடுத்திருக்க வேண்டும்.
வேற்று மதத்தினரை அழைத்து சமூக நல்லிணக்கம் மேற்கொள்வதென்பது கபட நாடகம். வேற்று மதத்தினர் வழிபாட்டு இடங்களிலும் பிரச்னை எழும் போது அதிகாரிகள் வழிபாட்டு இடங்களுக்கு உடனடியாக சீல் வைத்துள்ளனரா? அமைதி கூட்டத்துக்கு இந்து அமைப்புகளை, இந்து சமுதாய பெரியவர்களை அழைத்துள்ளனரா?இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், இந்து சமூகத்தில் ஒற்றுமை உணர்வு, சகோதரத்துவம் ஏற்படவும் இந்து முன்னணி விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.