சட்டவிரோத மகளிர் சுய உதவிக்குழுக்களை தடை செய்ய வேண்டும் - மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் வலியுறுத்தல்
- சிறு நிறுவனங்கள் பல ஏழை, எளிய மக்களுக்கு வாரம் கந்துவட்டி கொடுத்து வருகிறார்கள்.
- மக்களின் சுய மரியாதையை கெடுத்து அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்.
திருப்பூர் :
மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் ஆலோசனை கூட்டம் திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. இதற்கு நிறுவன தலைவர் இப்ராஹிம் பாதுஷா தலைமை தாங்கி பேசினார். இதில் பொதுச்செயலாளர் வேல்முருகன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், அமைப்பு செயலாளர் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் யுவராஜ், திருப்பூர் மாவட்ட தலைவர் மகேந்திரன், செயலாளர் பிரகாஷ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதன் பின்னர் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவன தலைவர் இப்ராஹிம் பாதுஷா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடன் கொடுத்து விட்டு தமிழகத்தில் கலெக்சன் டீம் என சட்டவிரோதமாக பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து வருகிறார்கள்.
சிறு நிறுவனங்கள் பல ஏழை, எளிய மக்களுக்கு வாரம் கொடுத்து வருகிறார்கள். மகளிர் சுய உதவிக்குழு தலைவிகள் என்ற பெயரில் சிலர் கமிஷன் பெற்று விட்டு ஏழை, எளிய மக்களிடம் குழு கடன் என்ற பெயரில் அடாவடி செய்து வருகிறார்கள்.
மேலும், மக்களின் சுய மரியாதையை கெடுத்து அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள். எனவே சட்டவிரோத மகளிர் சுய உதவிக்குழுக்களை தடை செய்ய வேண்டும். கலெக்ஷன் டீமையும் தடை செய்ய வேண்டும் என்றார்.