பல்லடம் பகுதியில் வீடுகள் முன்பு தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி
- மாலை வேளைகளில் மழை பெய்து வருகிறது.
- மழை நீருடன்,கழிவு நீரும் சேர்ந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பல்லடம் :
பல்லடத்தில் கடந்த 4 நாட்களாக, தொடர்ந்து மாலை வேளைகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சுமார் ஒரு மணிநேரம் தொடர்ந்து மழை பெய்ததால் பல்லடம் கிராம பகுதிகளான, சுக்கம்பாளையம், கரடிவாவிபுதூர் ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். சுக்கம்பாளையம் காலனி பகுதியில் மழை நீருடன்,கழிவு நீரும் சேர்ந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- மழைநீர் செல்வதற்கு சரியான வடிகால் வசதி இல்லாததால், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்து விட்டது.
இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது .எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, மழைநீர் குடியிருப்பு பகுதியில் தேங்காவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதேபோல கரடிவாவி புதூர் பகுதியில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தும், வீடுகள் முன்பு குளம் போல் மழைநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.