உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

கனடா விவகாரத்தால் இந்திய ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் பாதிப்பு இல்லை-ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் பேட்டி

Published On 2023-09-24 11:21 GMT   |   Update On 2023-09-24 11:21 GMT
  • பல்வேறு காரணங்களால், கனடாவுடனான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வெகுவாக குறைந்து விட்டது.
  • வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்ததால், சலுகையுடன் கனடாவுக்கு ஏற்றுமதி செய்யலாம் என ஏற்றுமதியாளர்கள் காத்திருந்தனர்.

திருப்பூர்:

திருப்பூரில் இருந்து கனடாவுக்கு பின்னலாடை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியா - கனடா விவகாரம் காரணமாக பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது:-

பல்வேறு காரணங்களால், கனடாவுடனான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வெகுவாக குறைந்து விட்டது. கோட்டா முறை ரத்தான பிறகு, இந்தியாவுடன் வர்த்தக தொடர்பை குறைத்துக்கொண்ட கனடா, வங்கதேசத்துக்கு ஆர்டர்களை அதிக அளவில் வழங்கி வருகிறது.

அமெரிக்கா, ஐரோப்பியா, ஐக்கிய அரபு நாடுகள், பிரிட்டன், ஆப்பிரிக்க நாடுகள், ஆசிய நாடுகளுடன் ஏற்றுமதி வர்த்தகம் சிறப்பாக நடந்து வருகிறது.கடந்த நிதியாண்டில், இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி 61 ஆயிரத்து 764 கோடி அளவுக்கு நடந்துள்ளது. அதில் கனடாவின் பங்களிப்பு 2 சதவீதம் மட்டுமே.அதாவது, 1,304 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளது.

கனடாவுடன் ஏற்பட்ட மோதலால் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரிய பாதிப்பு இருக்காது. புதிய சந்தை வாய்ப்புகள் தொடர்பான விசாரணை ஆக்கப்பூர்வமாக இருப்பதால் மற்ற நாடுகளில் புதிய வாய்ப்புகளை வசப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்ததால், சலுகையுடன் கனடாவுக்கு ஏற்றுமதி செய்யலாம் என ஏற்றுமதியாளர்கள் காத்திருந்தனர். கனடா விவகாரத்தால் வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை, கனடா - இந்தியா இருதரப்பும் நிறுத்தி வைத்துள்ளன. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் மாற்று வாய்ப்புகளை தேட தொடங்கி விட்டனர்.

Tags:    

Similar News