வெளிமாநில தொழிலாளா்கள் குறித்த விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் - தொழிலாளர் துறை அறிவுறுத்தல்
- விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய நிறுவன உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தொழிலாளா்களின் பெயா், ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) (பொறுப்பு) க.செந்தில்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :- திருப்பூா் மாவட்டத்தில் இயங்கி வரும் உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி தொழில் நிறுவனங்கள், முடிதிருத்தும் நிலையங்கள், கோழிப் பண்ணைகள், பின்னலாடை நிறுவனங்கள், அரிசி ஆலைகள், வீட்டு பராமரிப்புப் பணிகள், இதர நிறுவனங்கள், கடைகளில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேலையளிப்பாா், நிறுவன உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிமாநிலத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்கள், வேலையளிப்பவா்கள் தொழிலாளா் துறையால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் அல்லது உரிமம் எண் ஆகியவற்றைக் கொண்டு இணையதளத்தில் தனியாக ஒரு பயனாளா் குறியீட்டு எண்ணை உருவாக்கி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வெளிமாநிலத் தொழிலாளா்களின் பெயா், கைப்பேசி எண், பிறந்த தேதி, ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், முகவரி, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.