வாழைகளுக்கான காப்பீடு திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் -விவசாயிகள் எதிர்பார்ப்பு
- பல 100 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி ஆண்டுதோறும் நடக்கிறது.
- பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர், கோவை மாவட்டங்களில் விவசாயம் பரவலாக நடந்து வருகிறது. காய்கறி பயிர்கள் மட்டுமின்றி தென்னை, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட நீண்ட கால பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த இரண்டு மாவட்டங்களில், பல 100 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி ஆண்டுதோறும் நடக்கிறது. உற்பத்தியாகும் வாழைகள், வியாபாரிகள் மூலம் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. கனமழை, வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், இயற்கையாக பரவும் தீ விபத்து உட்பட பல்வேறு காரணங்களால், பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.குறிப்பாக வாழை பயிரிடும் விவசாயிகள், கனமழை, சூறைக்காற்று ஆகியவற்றின் காரணமாக பெருத்த நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
குறிப்பிட்ட சில பயிர்களுக்கு மட்டுமே அரசு காப்பீடு திட்டத்தை வழங்குகிறது. இதனால் விவசாயிகள், பேரிடர் மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். ஆனால் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களுக்கு மட்டுமே இந்த காப்பீடு திட்டம் பொருந்தும் என்பதால், இதர கிராமங்களில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இது பொருந்தாது.இதனால் இழப்பினை சந்திக்கும் வாழை விவசாயிகள் செய்வதறியாமல் பரிதவிக்கின்றனர். ஆண்டு தோறும் பேரிடர் காரணமாக வாழைகள் கடுமையாக சேதமடைகின்றன.
சமீபத்தில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் வீசிய சூறைக்காற்று மற்றும் கன மழையால் பல 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. எனவே அனைத்து தரப்பு விவசாயிகளும் பயன்பெறும் வகையில் காப்பீடு திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் காற்றுக்கு வாழை மரங்கள் முறிவதற்கான வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை மையத்தின் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை சார்பில் திருப்பூர் மாவட்டத்தின் காலநிலை விவரம் வழங்கி வருகிறது. அதன்படி வரும் நாட்களில் மாவட்டத்தின் காலநிலை, 35 முதல் 37 டிகிரி செல்சியஸாக இருக்கும். சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு 4 முதல், 8 கி.மீ., வேகத்தில், பெரும்பாலும் கிழக்கு திசையில் இருந்து, தென் கிழக்கு திசை வரை பதிவாகும்.
காற்றுக்கு 5 மாதம் வயதுடைய வாழை மரங்கள் சாய்ந்து விழும் வாய்ப்புள்ளதால் மரங்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும். பரவலாக வாழையில் குருத்து அழுகல் நோய் தென்படுகிறது. இதை கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் அளவுக்கு பிளீச்சிங் பவுடர் கலந்து, மரத்தின் அருகே ஊற்ற வேண்டும். நோய் தாக்குவதற்கு முன் இந்த மருந்து செலுத்தினால் நோய் பரவாமல் பாதுகாக்க முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.