ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் - விரிவாக திட்ட அறிக்கை தயாரிப்பு
- வடபூதிநத்தம் கிராமத்தில் கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
- விவசாயிகளுக்கு மானிய உதவிகள், இடு பொருட்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மடத்துக்குளம் :
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் வேளாண்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.உடுமலை அருகே, வடபூதிநத்தம் கிராமத்தில் கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
வேளாண் துறை உதவி இயக்குனர் தேவி தலைமை வகித்தார். தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடைத்துறை, மின் வாரியம் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.இதில்உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தும் சிறப்புத்திட்டங்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய உதவிகள், இடு பொருட்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமத்திலுள்ள விவசாயிகளுக்கு தேவைப்படும் மானியத்திட்டங்கள் குறித்து பதிவு செய்தனர். கிராமத்திலுள்ள விவசாயிகள் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் வேளாண் வளர்ச்சி திட்டங்களில் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழாவது பயன்பெறும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.உழவன் செயலி வழியாக விவசாயிகள் பதிவு செய்வது குறித்தும் சிறு, குறு விவசாய சான்று பெறுவது, உழவர் கடன் அட்டை, பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு, கிசான் சம்மான் திட்டத்தின் கீழ், 2 ஆயிரம் ரூபாய் தவணை கிடைக்காத விவசாயிகளுக்கு தீர்வு, நடமாடும் மண் பரிசோதனை வழியாக ஆய்வு செய்து உரப்பரிந்துரை செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.