- கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 2023 -24ம் கல்வியாண்டு விரைவில் துவங்குகிறது.
- தூய்மைப் பணியாளர்களைக்கொண்டு பள்ளியில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடுமலை :
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 2023 -24ம் கல்வியாண்டு விரைவில் துவங்குகிறது.இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து அரசு பள்ளிகளிலும் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் பள்ளி வளாகம், கழிவறை மற்றும் குடிநீர் தொட்டிகளை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்ய தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி உடுமலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தூய்மைப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:- உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்டு அரசு பள்ளிகள் செயல்படுகின்றன.எனவே அந்தந்த உள்ளாட்சி அமைப்பு தூய்மைப் பணியாளர்களைக்கொண்டு பள்ளியில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல பள்ளியில் அமைந்துள்ள மின் சாதனங்கள், இணைப்புகள், மின் பணியாளர்களை கொண்டு சரிபார்க்கப்படுகிறது. சிதிலமடைந்துள்ள கட்டடங்கள் இருந்தால் அவற்றை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குடிநீர் குழாயில் உடைப்பு, கசிவு உள்ளிட்டவை சீரமைக்கப்படுகிறது.வகுப்பறைகள், மாணவர்களுக்கான இருக்கைகள் சுத்தப்படுத்தப்படுகிறது. ஆங்கில வழிப் பிரிவுகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.