துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேட்டில் குளறுபடி - சுகாதார அலுவலர் பணியிடை நீக்கம்
- 60 வார்டுகளிலும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
- மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடிக்கு புகார்கள் வந்தது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறு, விறுப்பாக நடந்து வருகிறது. இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் மக்கள் அதிகம் நிறைந்த பகுதியாக திருப்பூர் மாநகராட்சி உள்ளது. 60 வார்டுகள் உள்ள நிலையில், 60 வார்டுகளிலும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குப்பைகளை அகற்ற மற்றும் துப்புரவு பணியாளர்களும் தேவைக்கு ஏற்ப நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு என வருகை பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் எந்தெந்த பணிகள் எங்கு நடந்துள்ளது என்பதையும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சை (56). இவர் 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடுகள் செய்து வருவதாக மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடிக்கு புகார்கள் வந்தது. அதன்படி அடிப்படையில் முதற்கட்டாக நடந்த விசாரணையின்படி 2 வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சையை, மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது:-
திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சை துப்புரவு பணியாளர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடு செய்து வருவதாகவும், வராத பணியாளர்கள் வேலைக்கு வந்ததாக அதில் பதிவிட்டு முறைகேடு செய்ததாகவும் வந்த புகாரின் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேடு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு முடிந்த பின்னர் முறைகேடுகளுக்கு ஏற்ப துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றார்.