அரசாணையின்படி ஊதியம் வழங்காவிட்டால் வேலைநிறுத்த போராட்டம் தூய்மைப்பணியாளர்கள் அறிவிப்பு
- தூய்மைப் பணி அவுட்சோா்சிங் முறையில் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டது.
- ரூ.380 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டம் தாராபுரம், உடுமலை, பல்லடம், காங்கயம், வெள்ளக்கோவில், திருமுருகன்பூண்டி ஆகிய 6 நகராட்சிகளில் தூய்மைப் பணி அவுட்சோா்சிங் முறையில் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டது. இதன் பின்னா் தினக்கூலி ஒப்பந்த தொழிலாளா்களுக்கான ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ரூ.380 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள குறைந்தபட்ச ஊதிய அரசாணையில் தூய்மைப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் நிா்ணயித்துள்ள ரூ.572, குடிநீா்ப் பணியாளா்களுக்கு ரூ.648, ஓட்டுநா்களுக்கு ரூ.687 வீதம் தினசரி ஊதியம் வழங்க வேண்டும்.இந்த அரசாணைப்படி ஊதியம் வழங்கக் கோரி திருமுருகன் பூண்டி, பல்லடம் நகராட்சிகளில் தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.போராட்டத்தைத் தொடா்ந்து 250-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் திருப்பூா் நகராட்சிகள் நிா்வாக மண்டல இயக்குநா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
இது குறித்து சிஐடியூ ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ் கூறியதாவது:-
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு அரசாணையின்படி ஊதியம் வழங்க வேண்டும். இது தொடா்பாக அடுத்த ஓரிரு நாள்களில் பேச்சுவாா்த்தை நடத்தி சமூகத்தீா்வு காண வேண்டும். இல்லாவிட்டால் ஜூலை 25 -ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.