உள்ளூர் செய்திகள்

செல்வராஜ் எம்.எல்.ஏ.

கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்

Published On 2023-06-02 08:00 GMT   |   Update On 2023-06-02 08:00 GMT
  • தனது 94 ஆண்டு ஆயுட்காலத்தில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர்.
  • கலைஞரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும்.

திருப்பூர் :

திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழே உயிராக, தமிழினமே உணர்வாக, தமிழர் நலனும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியுமே வாழ்நாள் செயல் திட்டமாக கொண்ட ஓய்வில்லா சூரியன், தனது 94 ஆண்டு ஆயுட்காலத்தில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர்.அரை நூற்றாண்டு காலம் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருந்து தமிழ்நாட்டு அரசியலின் அச்சாணியாக செயல்பட்டவர். இலக்கியம் , கவிதை , இதழியல் , நாடகம் ,திரைப்படம் எனத்தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்த பன்முகத்திறன் கொண்ட படைப்பாளர்.

உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்த நம் 'தமிழினத் தலைவர்' கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளான நாளை 3-ந்தேதி அன்று திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகம், வட்டக்கழகம், வார்டு கழகம், ஊராட்சி கழகங்கள் என மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கலைஞரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்தி புதிய கொடியேற்ற வேண்டும்.

பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பல்வேறு முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், பார்வையற்றோர் இல்லங்கள், மாணவர் விடுதிகள், கருணை இல்லங்கள், பெண்கள் காப்பகங்கள், மனநலகாப்பகம், பார்வையற்றோர் இல்லம் போன்ற இடங்களில் வாழ்கின்றவர்களுக்கு காலை, மதியம், இரவு உணவுகள் வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு, உடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், இலவச கண் மருத்துவ முகாம், ரத்த தான முகாம்கள் நடத்த வேண்டும்.

ஜூன் மாதம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு கபடிபோட்டி, கிரிக்கெட் போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகளையும் சிறப்பாக நடத்திட வேண்டும்.மேலும் நடைபெறுகின்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்களை திரளாக பங்கேற்க செய்து நிகழ்ச்சிகளை சிறப்பாக கொண்டாடிட வேண்டும். இவர் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News