பின்னல் துணி தயாரிப்புக்கு ஆர்டர் வருகை குறைவு நிட்டிங் துறையினர் கவலை
- நூல் விலையை உயர்வால் கடந்த 3 மாதங்களாக திருப்பூரில் நிட்டிங் நிறுவனங்களின் இயக்கம் மந்தமாகியுள்ளது.
- 3 மாதங்களாக 3 முதல் நான்கு எந்திரங்களை மட்டுமே இயக்க முடிகிறது.
திருப்பூர் :
பஞ்சு விலை உயர்வால், தமிழக நூற்பாலைகள் 18 மாதங்களாக தொடர்ந்து நூல் விலையை உயர்த்தி வந்தன. ஆடை ரகங்கள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதன் எதிரொலியாக வெளி மாநிலம், வெளிநாட்டு வர்த்தகர்களிடமிருந்து திருப்பூருக்கு பின்னலாடை ஆர்டர் வருகை குறையத்துவங்கியது. நிட்டிங், டையிங், காம்பாக்டிங், ரைசிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, தையல், காஜாபட்டன், செக்கிங், அயர்னிங் என பின்னலாடை உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்து துறைகளின் இயக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1-ந் தேதி கிலோவுக்கு 40 ரூபாய் நூல் விலை குறைக்கப்பட்டுள்ளது.ஆனாலும் உற்பத்தி சங்கிலியின் முதல் நிலையில் உள்ள நிட்டிங் நிறுவனங்களின் இயக்கம் இன்னும் வேகம் பெறவில்லை. ஆடை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து துணி தயாரிப்புக்கான ஆர்டர் வருகை குறைவால் நிட்டிங் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து நிட்டிங் நிறுவனஉரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-
தொடர் நூல் விலை உயர்வால், கடந்த 3 மாதங்களாக திருப்பூரில் நிட்டிங் நிறுவனங்களின் இயக்கம் மந்தமாகியுள்ளது. எங்கள் நிறுவனத்தில் 15 நிட்டிங் எந்திரங்கள் உள்ளன. 10 ஆபரேட்டர்கள், பகல் இரவுக்கு தலா 2 வீதம் நான்கு ஹெல்பர்கள் பணியில் இருந்தனர். நாளொன்றுக்கு (2 ஷிப்ட்) 3ஆயிரம் கிலோ பின்னல் துணி தயாரானது.ஆனால் கடந்த 3 மாதங்களாக 3 முதல் நான்கு எந்திரங்களை மட்டுமே இயக்க முடிகிறது. நாளொன்றுக்கு 900 கிலோ அளவிலேயே துணி தயாரிப்பு நடக்கிறது.
நான்கு ஆபரேட்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.பகலில் மட்டும் ஒரு ஹெல்பரை பணி அமர்த்தியுள்ளோம். துணி வியாபாரமும் மந்தமாகிவிட்டது. அதனால் துணி வர்த்தகர்களிடமிருந்து ஆர்டர் பெறமுடியாத நிலைக்கு நிட்டிங் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இம்மாதம் கிலோவுக்கு 40 ரூபாய் நூல் விலை குறைந்துள்ளது. இதுனால் துணி தயாரிப்புக்கு ஆர்டர் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம். நூல் விலை மேலும் குறையும் என்கிற எதிர்பார்ப்பில் பெரும்பாலான ஆடை உற்பத்தியாளர்கள் நூல் கொள்முதலை தவிர்த்து வருகின்றனர்.
ஏற்றுமதியாளர்களை பொறுத்தவரை நூல் விலை எவ்வளவு உயர்ந்தாலும் கைவசம் ஆர்டர் இருந்தால், கட்டாயம் நூல் கொள்முதல் செய்து விடுவர். சீசன் இல்லாததால் வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை குறைந்துவிட்டது. எனவே நிட்டிங் உள்பட பின்னலாடை உற்பத்தி சங்கிலி, இயல்பான இயக்கத்துக்கு வருவதற்கு மேலும் இரண்டு மாதங்களாகும் நிலை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.