உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு - விழிப்புணர்வு ஏற்படுத்த அரசியல் கட்சியினர் வேண்டுகோள்

Published On 2023-04-07 11:40 GMT   |   Update On 2023-04-07 11:40 GMT
  • இந்திய தேர்தல் கமிஷன் அளித்த கால அவகாசம் கடந்த மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
  • 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 11 ஆயிரத்து 772 வாக்காளர் உள்ளனர்.

தாராபுரம் :

வாக்காளர் பட்டியலை முறைப்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் கமிஷன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் முதல் வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு தொடங்கியது.

'Voter Help Line' செயலி, nvsp.in என்கிற தேர்தல் கமிஷன் இணையதளம் வாயிலாக ஆதார் எண் இணைக்க வழிவகை செய்யப்பட்டது. வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணி நடைபெற்றபோது ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் விவரங்களை பெற்றனர். ஆதார் இணைப்புக்கு இந்திய தேர்தல் கமிஷன் அளித்த கால அவகாசம் கடந்த மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 11 ஆயிரத்து 772 வாக்காளர் உள்ளனர். இவர்களில் இதுவரை 55.84 சதவீதம் பேர் அதாவது 12 லட்சத்து 90 ஆயிரத்து 837 பேர் மட்டுமே ஆதார் எண் இணைத்துள்ளனர்.வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பில் 36.13 சதவீதத்துடன் திருப்பூர் வடக்கு தொகுதி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர் 3.84 லட்சம் பேரில் 1.38 லட்சம் பேர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர். பல்லடம் தொகுதியில் 52.13 சதவீதம் பேர், திருப்பூர் தெற்கில் 53.80 சதவீதம் பேர் ஆதார் இணைத்துள்ளனர். ஆதார் இணைப்பு விகிதத்தில் மடத்துக்குளம், உடுமலை தொகுதிகள் முந்துகின்றன.

2.29 லட்சம் வாக்காளரில் 1.58 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இதனால் 69.04 சதவீதத்துடன் ஆதார் இணைப்பில் மடத்துக்குளம் முன்னிலை வகிக்கிறது. உடுமலையில் 63.21 சதவீதம், தாராபுரத்தில் 62.68,அவிநாசியில் 61.47, காங்கயத்தில் 60.76 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.போலிகளை களைந்து செம்மையான வாக்காளர் பட்டியல் உருவாக வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு மிகவும் அவசியமாகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் மொத்த வாக்காளரில் 44 சதவீதம் அதாவது 10.20 லட்சம் பேர் இன்னும் ஆதார் எண் இணைக்கவி ல்லை. தேர்தல் கமிஷன், ஆதார் இணைப்புக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தி 100 சதவீத ஆதார் இணைப்பை எட்ட செய்யவேண்டும் என்பது பெரும்பாலான அரசியல் கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News