உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மழைக்கால மின் விபத்துக்களை தவிர்க்கும் வழிமுறைகள் - பல்லடம் மின்வாரிய அதிகாரி விளக்கம்

Published On 2022-10-26 05:17 GMT   |   Update On 2022-10-26 05:17 GMT
  • பொதுமக்கள் இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்க வேண்டாம்.
  • மின் கம்பிகள், மின் சாதனங்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தால், உடனடியாக மின்சாரத்தை நிறுத்த வேண்டும்.

பல்லடம் :

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், மின்சார விபத்துக்களை தடுப்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.ஜவகர் செய்தியாளரிடம் கூறியதாவது: -

பொதுமக்கள் இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்க வேண்டாம். கான்கிரீட் கூரையிலான கட்டடங்களிலோ, உலோகத்தால் மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களில் பாதுகாப்பாக இருக்கலாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை பார்த்தால், அவற்றை மிதிக்கவோ,தாண்டவோ செய்யாமல்,அங்கிருந்து உடனடியாக வெளியேறி, மின் வாரியத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பிகள், மின் சாதனங்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தால், உடனடியாக மின்சாரத்தை நிறுத்த வேண்டும்.

ஈரக்கையாலும், வெறுங்காலுடனும், மின்சாரம் சார்ந்த எதையும் தொடக்கூடாது. மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள வயர் அல்லது மின் கம்பத்தின் மீது கயிறு கட்டி, துணி காய வைக்கவும், மின்கம்பங்களை, பந்தல்களாகவும், விளம்பர பலகைகள் அமைக்கவும் கூடாது. மின்மாற்றி, மின்கம்பம், மின்பகிர்வு பெட்டி மற்றும் ஸ்டே ஒயர்கள் அருகில், செல்லக்கூடாது. வீடுகளில், குளியலறை மற்றும் கழிப்பறையில், ஈரமான இடங்களில், மின் சுவிட்சுகளை பொருத்த கூடாது.

இடி, மின்னலின் போது குடிசை வீட்டில், மரத்தின் அடியில், பேருந்து நிறுத்த நிழற்கூரையின் கீழ் நிற்கக்கூடாது. ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற, வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு, நில இணைப்புடன் கூடிய, மூன்று பின் கொண்ட "சாக்கெட்" பிளக்குகள் மூலமாக மட்டுமே, மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.

வீடுகளில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டில் மின் கசிவு தடுப்பான் பொருத்தினால், மின்கசிவால் உண்டாகும் விபத்தை தவிர்க்கலாம். உடைந்துபோன சுவிட்ச் மற்றும் பிளக்குகளை, உடனே மாற்ற வேண்டும். பழுதான மின்சார சாதனங்களை, உபயோகப்படுத்த வேண்டாம்.வீட்டில், எர்த் பைப் போடுவதுடன், அதை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில், சரியாக பராமரிக்கவும், சுவிட்சுகள் மற்றும் பிளக்குகளை, குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.சுவற்றின் உள்பகுதியில், மின்சாரம் எடுத்துச்செல்லும் ஒயர்களுடன் கூடிய, பி.வி.சி., பைப்புகள், பதிக்கப்பட்டிருந்தால், அப்பகுதிகளில், ஆணி அடிப்பதை தவிர்க்கவும்.

மின்சார தீ விபத்திற்கேற்ற தீயணைப்பான்களை மட்டுமே, மின்சாதனங்களில், தீ விபத்து உண்டாகும் போது பயன்படுத்த வேண்டும்.உலர்ந்த மணல், கம்பளி போர்வை, உலர்ந்த ரசாயன பொடி அல்லது கரியமில வாயு ஆகிய தீயணைப்பான்களை பயன்படுத்த வேண்டும். மின்சாரத்தால் ஏற்பட்ட தீயை தண்ணீர் கொண்டு அணைக்கக்கூடாது.மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக மெயின் சுவிட்சை நிறுத்தி விட வேண்டும். மின்கம்பங்கள் சேதம், மழை காலங்களில் மின் கம்பிகள் அறுந்து கிடந்தால், 'மின்னகம்' மொபைல் எண் 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News