தென்னையில் கருந்தலைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் - வேளாண் அதிகாரிகள் விளக்கம்
- 4,000 ஏக்கர் பரப்பளவில், தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
- கருந்தலைப்புழு அனைத்து வயதுள்ள மரங்களையும் தாக்குகிறது.
அவிநாசி :
அவிநாசி வட்டாரத்தில் 4,000 ஏக்கர் பரப்பளவில், தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் தென்னையில் கருந்தலைப்புழு தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. பழங்கரையில் வேளாண்மை துறை மற்றும் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் இணைந்து கருந்தலைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை குறித்து விளக்கினர்.
அவிநாசி வேளாண்மை அலுவலர் சுஜி வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு பேசுகையில், கருந்தலைப்புழு, அனைத்து வயதுள்ள மரங்களையும் தாக்குகிறது. மரத்தின் அடிப்பகுதியில் உள்ள ஓலைகளை அதிகம் தாக்குவதால் கொண்டையின் மேற்பகுதியில் உள்ள 3,4 ஓலைகளை தவிர மற்ற அனைத்து ஓலைகளும் காய்ந்து விடுகிறது. ஓலையின் அடிப்பகுதியில் உள்ள பச்சையத்தை சுரண்டி இப்புழுக்கள் உண்கின்றன. அதிகமாக நோய் தாக்கப்பட்ட மரங்கள் எரிந்து தீய்ந்தது போல் காட்சியளிக்கும் என்றார்.